விவசாய கிணறுகளில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


விவசாய கிணறுகளில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 May 2019 10:15 PM GMT (Updated: 28 May 2019 6:11 PM GMT)

அனுமதியின்றி விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு காரணம், தனியார் சிலர் இப்பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் அனுமதியின்றி நீரை அதிக அளவில் உறிஞ்சி, லாரிகள், டிராக்டர்களில் எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்று வருவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, உதவி கலெக்டர் சரவணன் உத்தரவின்பேரில், வாலாஜாபாத் வட்டாட்சியர் கோடீஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் வாலாஜாபாத் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நத்தாநல்லூர்- சேர்க்காடு பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீரை எடுத்துக்கொண்டிருந்த லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஆய்வு நடத்தினர்.

ஆய்வில் குடிநீர் எடுத்துச்செல்ல எவ்வித அனுமதியும் அவர்கள் பெறவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எனவே விவசாய கிணறுகளில் அனுமதியின்றி தண்ணீர் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story