குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி


குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி
x
தினத்தந்தி 28 May 2019 11:15 PM GMT (Updated: 28 May 2019 6:47 PM GMT)

திருவாரூர் அருகே குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் மனைவி அடித்து கொன்றார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள அகரத்திருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 48) விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு புவனேஷ்குமார், பிரவீன்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தினமும் ரவி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மகன்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ரவி, தனது மனைவி சித்ராவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறின்போது சித்ராவின் தலையை கட்டையால் அடித்து காயப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவருடைய 2-வது மகன் பிரவீன்குமாருக்கும், ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரவி, பிரவீன்குமாரை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ரவி, சித்ராவை தாக்கியதாக தெரிகிறது.

தனது கணவர் அடித்து துன்புறுத்தி வந்ததால் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த கொடுமையை தாங்கிக்கொள்வது, இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று சித்ரா முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த ரவியின் தலையில் சுத்தியலால் சித்ரா அடித்துக் கொன்றார்.

பின்னர் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்ற சித்ரா, தனது கணவரை தான் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் கொடுமைப்படுத்திய கணவனை, மனைவியே சுத்தியலால் அடித்துக்கொன்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story