கள்ளக்குறிச்சி அருகே, 3 வீடுகளில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை - பட்டப்பகலில் மர்மநபர்கள் கைவரிசை


கள்ளக்குறிச்சி அருகே, 3 வீடுகளில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை - பட்டப்பகலில் மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 28 May 2019 10:30 PM GMT (Updated: 28 May 2019 7:24 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே பட்டப்பகலில் 3 வீடுகளில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆதி என்கிற மணிகண்டன் (வயது 44), விவசாயி. பெருமங்கலத்தில் உள்ள இவரது உறவினர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணிகண்டன், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்கள் காசி(47), தமிழரசன்(54) ஆகியோரது குடும்பத்தினருடன் பெருமங்கலத்துக்கு நேற்று முன்தினம் காலை சென்றார்.

பின்னர் மாலையில் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரும் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது 3 வீடுகளின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தங்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது 3 வீடுகளிலும் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் மணிகண்டன் வீட்டில் இருந்த 35 பவுன் நகைகள் மற்றும் 20 பட்டு சேலைகளையும், காசி வீட்டில் 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் தமிழரசன் வீட்டில் வைத்திருந்த ¾ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரும் தங்களது வீடுகளை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலிலேயே வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் 3 வீடுகளிலும் இருந்த மொத்தம் 37 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம், 20 பட்டு சேலைகள், ¾ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் 3 வீடுகளிலும் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி மந்தைவெளியில் உள்ள மாரியம்மன் கோவில் வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story