சேரம்பாடி அருகே, சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு சாவு - பொதுமக்கள் பீதி
சேரம்பாடி அருகே சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு உயிரிழந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அருகே உள்ளது நாயக்கன்சோலை. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால் சிறுத்தைப்புலி ஒன்று அடிக்கடி ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய், கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை தாக்கி கொன்று அட்டகாசம் செய்து வருகின்றது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அவர் விட்டு இருந்தார். அதன்பின்னர் நீண்ட நேரம் ஆகியும் 4 வயதுடைய பசுமாடு ஒன்று மட்டும் வீடு திரும்பவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால், பசுமாட்டை தேடாமல் பார்த்தசாரதி விட்டுவிட்டார்.
அதன்பின்னர் நேற்று காலை காணாமல் போன பசுமாட்டை அவர் தேட தொடங்கினார். அப்போது வீட்டிற்கு அருகிலுள்ள புல்வெளியில் சிறுத்தைப்புலி தாக்கி அந்த பசுமாடு இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி, வனக்காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, பசுமாட்டின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. அப்போது தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஊருக்குள் புகுந்து பசுமாட்டை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story