நிலம் வாங்கித்தருவதாக பெண் டாக்டரிடம் ரூ.39½ லட்சம் மோசடி - 2 பேர் கைது


நிலம் வாங்கித்தருவதாக பெண் டாக்டரிடம் ரூ.39½ லட்சம் மோசடி - 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 May 2019 4:00 AM IST (Updated: 29 May 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

நிலம் வாங்கி தருவதாக பெண் டாக்டரிடம் ரூ.39½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை,

கோவை நியு சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ராஜேஸ்வரி. இவர் சிவானந்தபுரத்தில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவர் சொந்தமாக மருத்துவமனை கட்டிடம் கட்ட இடம்பார்த்து கொண்டிருந்தார். அப்போது சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ராஜேஸ்வரியிடம், சிவானந்தபுரம் மடாலயம் ரோட்டில் உள்ள 1½ சென்ட் காலியிடத்தை விற்பனை செய்வதாக கூறியுள்ளார். அதற்கான விலைபேசி ஒப்பந்தம் செய்து ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் வாங்கினார். அதே இடத்தின் அருகே உள்ள ஒரு பழைய கட்டிடத்தை டாக்டர் கிளினிக் நடத்த போக்கியத்திற்கு கொடுக்க ஒப்பந்தம் செய்து மேலும் ரூ.7 லட்சத்தை டாக்டரிடம் வாங்கினார்.

ஆனால் டாக்டருக்கு காலியிடத்தை கிரையம் செய்து கொடுக்காமலும், கட்டிடத்தை போக்கியத்திற்கு தராமலும் ராஜேந்திரன் காலதாமதம் செய்து வந்தார்.

மேலும் காலி இடத்தை ராஜேந்திரன் தன்னுடைய கொழுந்தியாள் சாவித்திரியின் பெயருக்கு தானசெட்டில்மென்ட் செய்வதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தி அதனை பதிவு செய்தார்.

இதுதொடர்பாக ராஜேந்திரன் வீட்டிற்கு டாக்டர் ராஜேஸ்வரி சென்று கேட்டுள்ளார். அவருக்கு ராஜேந்திரன், மனைவி பூங்கொடி, கொழுந்தியாள் சாவித்திரி ஆகியோர் சேர்ந்து பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து டாக்டர் ராஜேஸ்வரி கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமை யிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன், என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வரும் சாவித்திரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story