விராலிமலை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி 15 பயணிகள் காயம்


விராலிமலை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி 15 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதில் 15 பயணிகள் காயமடைந்தனர்.

விராலிமலை,

சென்னையிலிருந்து, நாகர்கோவிலுக்கு 32 பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியை சேர்ந்த முருகன் (வயது 35) என்பவர் ஓட்டினார். பஸ் நேற்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சிப்பட்டி அருகே வந்தபோது, முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் முருகன் பரிதாபமாக இறந்தார். பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர்.

15 பயணிகள் காயம்

விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ்சில் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த தாமஸ் பாண்டியன் மனைவி டெய்சி வசந்தி (42), சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் (43), பொன்ராஜ் மனைவி புஷ்பா (70), இவரது மகன் தாமஸ் (47), நாகர்கோவிலை சேர்ந்த அசோகன் மகன் அபிஷேக் (21), கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை சேர்ந்த லைலா (54), திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்த ராமமூர்த்தி (62), தச்சநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்த சண்முகம் மனைவி லோகநாயகி (42), விழுப்புரத்தை சேர்ந்த அர்ஜுன் மகன் தாமோதரன் (37), ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் செல்வம் (29) உள்பட 15 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்தில் இறந்த பஸ் டிரைவர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 17 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story