தொப்பூர் அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதி 4 கார்கள் சேதம் 2 பேர் படுகாயம்


தொப்பூர் அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதி 4 கார்கள் சேதம் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதியதில் 4 கார்கள் சேதம் அடைந்தன. காரில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த குறிஞ்சி நகரில் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் திருப்பூர் ஜீவா நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 48), கணேசன் (59) உள்பட 4 பேர் ஒரு காரில் பெங்களூருவுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்தனர். சுங்கச்சாவடிக்கு வந்ததும் கட்டணம் செலுத்த நின்று கொண்டிருந்தனர். சீனிவாசனின் கார் 4-வது காராக நின்றது.

கார்கள் சேதம்

அப்போது சேலத்தில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வம் (48) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சீனிவாசன் கார் மீது மோதியது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. சீனிவாசன், கணேசன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு நின்ற மற்ற 3 கார்களும் சேதம் அடைந்தன. இந்த விபத்து காரணமாக சேலம்-தர்மபுரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.

தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story