ஜெர்மனி நாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி, ரோட்டரி சங்க நிர்வாகிகளிடம் ரூ.17 லட்சம் மோசடி - டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


ஜெர்மனி நாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி, ரோட்டரி சங்க நிர்வாகிகளிடம் ரூ.17 லட்சம் மோசடி - டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 May 2019 10:30 PM GMT (Updated: 29 May 2019 5:51 PM GMT)

ஜெர்மனி நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி ரோட்டரி சங்க நிர்வாகிகளிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சரவணம்பட்டி,

கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 40). இவர் தனது நண்பர்கள் உள்பட 15 பேருடன் சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியை சேர்ந்த நிஜிஸ்குமார் (33) என்பவர் விளாங்குறிச்சி சாலையில் தி மெரிடியன் ஹாலிடேஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

நாங்கள் அனைவரும் இன்று (வியாழக்கிழமை) ஜெர்மனி நாட்டில் நடைபெறும் ரோட்டரி சங்க மாநாட்டிற்கு செல்வதற்கு இந்த நிறுவனத்தில் முன்பதிவு செய்து இருந்தோம். இதற்காக எங்களிடம் தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும் என அவர் கூறினார். அதற்கு நாங்கள் 15 பேர் வருவதாக கூறி, முன்பணமாக ரூ.17 லட்சம் கொடுத்தோம்.

இந்தநிலையில் கடந்த வாரம் ஜெர்மனிக்கு செல்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அவரிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதனால் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நாங்கள் அனைவரும் நேரடியாக வந்து அவரிடம் பேசினோம். அப்போது அவர் ஜெர்மனி செல்ல எந்தவித ஏற்பாடும் செய்யாமல் எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் நாங்கள் அங்கு நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். மேலும் நாங்கள் அவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது அவர் தரமறுத்து விட்டார். இந்த மோசடி குறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைதொடர்ந்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் நிஜிஸ்குமார் (33) மற்றும் அவரது உதவியாளர் கேரளாவை சேர்ந்த டிபின் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story