அப்துல்கலாம் ஆசைப்படி ‘ராமேசுவரம் சோலார் நகரமாக மாற மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும்’ - கலெக்டர் உறுதி


அப்துல்கலாம் ஆசைப்படி ‘ராமேசுவரம் சோலார் நகரமாக மாற மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும்’ - கலெக்டர் உறுதி
x
தினத்தந்தி 29 May 2019 10:30 PM GMT (Updated: 29 May 2019 5:51 PM GMT)

அப்துல்கலாம் ஆசைப்படி ராமேசுவரம் தீவு பகுதியை சோலார் நகரமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும் என்று கலெக்டர் கூறினார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த வீடு உள்ளது. அந்த வீட்டில் கலாமின் மூத்த சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் கலாமின் வீட்டிற்கு சென்று வீடு மற்றும் வீட்டின் மாடியில் உள்ள அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் அப்துல் கலாம் பவுண்டேசனுக்கு புதிதாக அலுவலக கட்டிடம் கலாமின் வீடு அருகில் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் வீரராகவராவ் புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமேசுவரத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து மிகவும் கஷ்டப்பட்டு படித்து பல சாதனைகள் படைத்து ஜனாதிபதியாக பதவி வகித்து பெருமை சேர்த்த அப்துல்கலாமை கோடிக்கணக்கான மக்கள் மனதில் வைத்து வாழ்ந்து வருகின்றனர். நாட்டுக்காக எல்லாவற்றிலும் தன்னை அதிகமாக ஆர்வப்படுத்திக் கொண்ட ஒரு சிறந்த தலைவர் அப்துல்கலாம். குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். கலாமின் ஆசைப்படி ராமேசுவரம் தீவை சோலார் நகரமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும். அதுபோல் அப்துல்கலாம் பவுண்டேசனுக்கு தேவையான ஒத்துழைப்பையும் மாவட்ட நிர்வாகம் வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலாமின் மூத்தசகோதரர் முகமது முத்து மீரான் லெப்பைமரைக்காயர், சி.பி.ஐ.முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், கலாம் பவுண்டேசன் நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன், நசீமா மரைக்காயர், ஷேக்தாவூது, ஷேக்சலீம், ரோட்டரி கிளப் தலைவர் கருப்பையா, வக்கீல்கள் ரவிச்சந்திரராமவன்னி, சோமசுந்தரம், பா.ஜனதா மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் ரோட்டரி தலைவர் சண்முகராஜேசுவரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள கலாமின் பல சாதனைகள் அடங்கிய விருதுகள், நினைவு பரிசுகள், கண்டு பிடிப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்.

Next Story