கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை வியாபாரிகள் வலியுறுத்தல்


கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை வியாபாரிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 May 2019 10:45 PM GMT (Updated: 29 May 2019 7:07 PM GMT)

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் புதிய பஸ்நிலையம் அருகே பழைய மீன் மார்க்கெட் உள்ளது. புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை, கும்பகோணம் 60 அடி சாலை, தஞ்சை மெயின் சாலை ஆகிய 3 சாலைகளின் சந்திப்பு பகுதியில் இந்த மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் மீன் மார்க்கெட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், மீன்மார்க்கெட் அமைந்துள்ள இடத்தில் புதிய வணிக வளாகம் அமைக்க உள்ளதாகவும் கூறி நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை காலி செய்தனர். மேலும் மீன்மார்க்கெட் கட்டிடத்துக்கு பூட்டு போட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக பழைய மீன்மார்க்கெட் கட்டிடம் யாருக்கும் பயனின்றி பூட்டி கிடக்கிறது.

வியாபாரிகள் வேதனை

இதனால் கட்டிடம் சிதிலம் அடைந்து வருவதாக கும்பகோணம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வர்த்தக சங்க நிர்வாகி சத்தியநாராயணன் கூறியதாவது:-

கும்பகோணத்தில் வியாபாரத்துக்கான கட்டமைப்பு வசதிகளை செய்துதர நகராட்சி நிர்வாகம் போதிய அளவு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்து வந்த பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை மூடி விட்டனர்.

இறைச்சி வியாபாரம்

இதனால் அந்த கட்டிடம் வீணாக கிடக்கிறது. இதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இறைச்சி விற்பனைக்கென தனியாக கட்டிடம் கட்டினால் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story