கர்நாடக அரசு தண்ணீர் திறந்தாலும் குறுவை சாகுபடி செய்ய இயலாது விவசாயிகள் கருத்து


கர்நாடக அரசு தண்ணீர் திறந்தாலும் குறுவை சாகுபடி செய்ய இயலாது விவசாயிகள் கருத்து
x
தினத்தந்தி 30 May 2019 3:30 AM IST (Updated: 30 May 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு தண்ணீர் திறந்தாலும் குறுவை சாகுபடி செய்ய இயலாது என விவசாயிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி பாசன பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பு இல்லை. மேட்டூர் அணையில் தற்போது 50 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. மேட்டூர் அணை கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி மூடப்பட்டது. அதன்பின்னர் கடந்த மாதம் (ஏப்ரல்) குடிநீர் தேவைகளுக்காக அணை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு உடனடியாக 9.2 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என கர்நாடகத்துக்கு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்தாலும் அதை கொண்டு குறுவை சாகுபடி செய்ய இயலாது என விவசாயிகள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நாச்சியார்பட்டி திருமாறன்:-

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. அதே சமயம் கர்நாடக அரசு காவிரி தொடர்பான எந்த உத்தரவையும் மதித்து செயல்படுவது இல்லை.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவையும் மீறினால் கர்நாடகத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தங்களுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டு தண்ணீரை திறந்து விட வேண்டும்.

கடம்பன்குடி பிரிதிவிராஜன்:- கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டாலும் தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய இயலாது. காரணம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லை. அனல் காற்றுடன் வெயில் அடிக்கிறது. ஆகையால் தண்ணீர் கடைமடை வரை சென்று சேருமா? என்பது சந்தேகமே.

எனவே காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மதித்து கர்நாடகம் தண்ணீர் திறந்தால் அந்த தண்ணீரை மேட்டூர் அணையில் சேமித்து வைத்து, அதனுடன் பருவமழை பெய்து வரும் தண்ணீரையும் சேமித்து முழு கொள்ளளவை எட்டியவுடன் அணையை திறக்க வேண்டும். அப்படி செய்தால் தான் விவாசாயிகள் அச்சமின்றி ஒருபோக நெல் சாகுபடி செய்ய முடியும். மேலும் ஜூன் மாத தண்ணீரை மட்டும் பெறுவது போதாது. மேட்டூர் அணை மூடப்பட்ட பிறகு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே மாதங்களுக்கான தண்ணீரையும் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி தமிழகத்துக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கினால் மட்டுமே குறுவை சாகுபடியை எளிதாக செய்ய இயலும் என்றும், பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி வழங்க வேண்டிய மொத்த தண்ணீரான 19.19 டி.எம்.சி. தண்ணீரையும் வழங்கினால் குறுவை சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

Next Story