மெஞ்ஞானபுரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் பணம் கொள்ளை


மெஞ்ஞானபுரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 30 May 2019 4:00 AM IST (Updated: 30 May 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் அதே பகுதியில் 3 வீடுகளில் திருட முயற்சி நடந்துள்ளது.

மெஞ்ஞானபுரம், 

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தண்டுபத்து ஊரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). தொழில் அதிபரான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான தண்டுபத்து வீட்டை இதே ஊரை சேர்ந்த சித்திரைலிங்கம் என்பவர் பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.50ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

நேற்று காலையில் அங்கு வந்த சித்திரைலிங்கம் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் சித்திரைலிங்கம் புகார் செய்துள்ளார்.

மேலும் அதே பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்குள்ள ஆனந்த், லிங்கம், சுதாகர் ஆகியோரது வீடுகளிலும் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் அந்த வீடுகளில் பொருட்கள் திருடு போகவில்லை.

இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story