திருச்செங்கோடு அருகே மர்ம விலங்கு நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்


திருச்செங்கோடு அருகே மர்ம விலங்கு நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 30 May 2019 4:30 AM IST (Updated: 30 May 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே மர்ம விலங்கு நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளதாகவும், அதை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பிளிக்கல்மேடு கிராமத்தில் மணி என்பருவக்கு சொந்தமான குச்சிக்கிழங்கு தோட்டத்தில் கடந்த 25-ந் தேதி மாலை பழநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சாந்தி மற்றும் பாப்பா ஆகியோர் புல் அறுக்க சென்றபோது உறுமல் சத்ததுடன் ஒரு மர்ம விலங்கு நிறைய முடி மற்றும் சிவந்த கண்களுடன் ஓடி வந்துள்ளது.

இதனைக் கண்ட இருவரும் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் தடி, கம்புடன் வந்து விரட்டியதில் அந்த மிருகம் எங்கோ ஓடி விட்டது. அந்த மிருகம் கரடிதான் எனவும் தங்களை கண்டவுடன் உறுமிக்கொண்டே விரட்டி வந்ததாகவும் சாந்தியும், பாப்பாவும் கூறினார்கள். இதையடுத்து கிழங்கு தோட்டத்தின் மைய பகுதிக்கு பெண்கள் வேலைக்கு செல்ல மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த முருகேசன் என்பவர் குச்சிகிழங்கு செடிகளுக்கு நடுவே அமர்ந்த நிலையில் சுமார் 4 அடி உயரத்துடன் கரிய உருவம் இருப்பதை பார்த்துள்ளார். அலறியடித்து ஓடிய முருகேசன் ஊருக்குள் வந்து சொல்லி உள்ளார்.

பின்னர் நாமக்கல் வனத் துறைக்கு கிராமத்து தோட்டத்திற்குள் விலங்கு புகுந்தது குறித்து தகவல் கொடுத்துள்ளனர். இதன்பேரில் மண்டல வனஅலுவலர் காஞ்சனா உத்தரவின்பேரில், வனசரகர் ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் வனச்சரக வனவர் தமிழ்வேந்தன் தலைமையில், வனக்காப்பாளர்கள் துரைசாமி, மோகன், குமார், வனக்காவலர்கள் மதிவாணன், பெரியசாமி ஆகியோர் கொண்ட குழு பிளிக்கல்மேடு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தோட்டத்திற்குள் அடையாளம் காண முடியாத விலங்கின் சில காலடி தடங்கள் இருப்பதை கண்டனர். மேலும் தோட்டத்திற்குள் சென்று விலங்கை தேடினார்கள். அந்த விலங்கை விரட்ட வெடிகளையும் கொண்டு சென்றனர். ஆனால் அந்த விலங்கை காணவில்லை. ஆனாலும் இரவு முழுவதும் கொட்டும் மழையிலும் தோட்டத்திற்குள் தங்கி இருந்து விலங்கு நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் எந்த விலங்கும் வனவர்கள் கண்களில் தென்படவில்லை.

மண்ணில் காணப்படும் காலடித்தடங்கள் கரடியின் காலடி தடங்கள் போல் தென்படவில்லை என்றும் அது கழுதைப்புலி காலடிபோல் தெரிவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். எங்கோ வழி தவறி வந்த அந்த விலங்கு தற்போது தோட்டத்திற்குள் இல்லை எனவும், தடம் மாறி சென்றிருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி வேலைக்கு செல்லலாம் எனவும், பாதுகாப்பிற்கு தாங்கள் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

இருந்தாலும் பெண்கள் முழுமையாக அச்சம் விலகாத நிலையில் தோட்டத்தின் ஓரப்பகுதிகளிலேயே வேலை செய்கின்றனர். இதுவரை எந்த கால்நடையோ மனிதர்களே அந்த மர்ம விலங்கால் தாக்கப்படவில்லை.

எனவே கால்நடைகளோ, மனிதர்களோ அந்த மர்ம விலங்கால் தாக்கப்படுவதற்குள் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த விலங்கை பிடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story