வாருகால் அமைக்கும் பணி, ராமேசுவரம் கோவிலின் கிழக்கு வாசல் மூடப்பட்டது - ஆகம விதி மீறப்பட்டதாக குற்றச்சாட்டு
வாருகால் பணியை காரணம் காட்டி ஆகம விதிமுறைகளை மீறி ராமேசுவரம் கோவிலின் கிழக்குவாசல் மூடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலாவதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு அங்கிருந்து சன்னதி தெரு, மண்டிதெரு, வடக்கு ரத வீதி சாலை வழியாக நடந்து வந்து வடக்கு வாசல் வழியாக உள்ளே சென்று 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவர். அதன் பின்னர் தெற்கு வாசல் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடி செல்லும் கழிவு நீர், மழை காலங்களில் பிரகாரங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் வெளியே செல்ல வசதியாக வாருகால் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கோவிலின் வடக்கு ரத வீதி சாலையில் இருந்து கிழக்கு ரத வீதி சாலை மற்றும் தெற்கு ரதவீதி சாலை வரையிலும் நெடுஞ்சாலை துறையின் மூலம் சுமார் ரூ.3 கோடி நிதியில் வாருகால் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக வடக்கு ரத வீதி சாலை, கிழக்குரத வீதி மற்றும் தெற்குரதவீதி வரையிலும் சுமார் 4 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு காங்கிரீட் தளம் போடப்பட்டு பணிநடைபெற்று வருகிறது. இந்த பணி துரிதமாக நடைபெறாமல் மந்த கதியில் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.
பள்ளம் தோண்டப்பட்டுள்ள வாசல் பகுதியில் பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும் வகையில் பலகைகளை போட்டு நடை பாதை எதுவும் அமைக்கப்படாமல் கடந்த 2 நாட்களாக கோவிலின் முக்கிய கிழக்குவாசலின் நுழைவு பகுதியில் உள்ள கதவுகள் மூடப்பட்டுள்ளன. வாருகால் பணிகள் முடிவடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அது வரையிலும் கிழக்குவாசல் பகுதி மூடியே கிடக்கும் என்றும் கூறப்படுகின்றது.
கோடை கால விடுமுறை நிறைவடையும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
கூட்டம் அதிகமாக வரும் நேரத்தில் முக்கிய வாசலான கிழக்குவாசல் மூடப்பட்டு இருப்பது பக்தர்களை மிகவும் அவதியடைய செய்துள்ளது. பொதுவாக கோவிலின் நடை திறக்கப்பட்ட பின்பு மீண்டும் கோவில் நடை அடைக்கப்படும் வரையிலும் முக்கிய வாசலான கிழக்கு வாசல் கதவுகள் அடைக்கப் பட கூடாது என்பது ஆகம விதிமுறை. ஆனால் விதிகளை மீறி கிழக்கு வாசலை கோவில் நிர்வாகத்தினரே அடைத்து வைத்து இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆகவே கிழக்கு நுழைவு வாசல் கதவுகளை உடனடியாக திறந்து வைப்பதோடு தோண்டப்பட்டுள்ள இடத்தில் பெரிய பலகைகளை அமைத்து நடை பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாருகால் பணியை துரிதப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story