ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சினிமா படம் பார்த்து சங்கிலி பறித்த வாலிபர் கைது


ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு சினிமா படம் பார்த்து சங்கிலி பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 May 2019 3:30 AM IST (Updated: 30 May 2019 10:09 PM IST)
t-max-icont-min-icon

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு, “மெட்ரோ” சினிமா படம் பார்த்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

திருவேற்காடு பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடந்தும், மொபட்டிலும் செல்லும் பெண்களை குறி வைத்து அடிக்கடி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க திருவேற்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

மேலும் சங்கிலி பறிப்பு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். சங்கிலி பறிப்பு நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தோடு இவரது உருவம் ஒத்துப்போனதால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று தீவிரமாக விசாரித்தனர்.

அதில் அவர், மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சுதாகர்(வயது 21) என்பதும், திருவேற்காடு பகுதியில் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்தனர்.

கைதான சுதாகர், பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் ஆடம்பரமாக வாழ முடியவில்லையே என மனம் வருந்தினார். குறுகிய காலத்தில் பணக்காரர் ஆவது எப்படி? என யோசித்து வந்தார்.

அப்போதுதான் “மெட்ரோ” என்ற திரைப்படத்தை பார்த்தார். அந்த படம், சென்னை நகரில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகுதான் சுதாகரும், தானும் அதேபோல் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டால் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என முடிவு செய்து இதுபோல் தனியாக செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான சுதாகரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 6 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story