குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 10 மின்மோட்டார்கள் பறிமுதல் நகராட்சி ஆணையர் நடவடிக்கை


குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 10 மின்மோட்டார்கள் பறிமுதல் நகராட்சி ஆணையர் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 May 2019 4:15 AM IST (Updated: 31 May 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 10 மின்மோட்டார்களை நகராட்சி ஆணையர் பறிமுதல் செய்தார்.

திருத்துறைப்பூண்டி,

கோடை வெயில் சுட்டெரிப்பதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு, குளங்கள், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் ஓரளவுக்கு கைகொடுத்து வருகிறது.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள ஒரு சில நபர்கள் குழாயில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீர் உறிஞ்சி வருவதாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்த நிலையில் நகராட்சி ஆணையர் பாஸ்கரன், நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலம் மற்றும் ஊழியர்கள் பல்வேறு வீடுகளில் ஆய்வு செய்தனர். இதில் முறைகேடாக குழாயில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீர் உறிஞ்சி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 10 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்தார்.

Next Story