அக்கரைக்குளத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி நாகையில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


அக்கரைக்குளத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி நாகையில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 May 2019 4:30 AM IST (Updated: 31 May 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

அக்கரைக்குளத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி நாகையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

அக்கரைக்குளத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஆர்வலர் குபேந்திரன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர்கள் பாட்ஷா, ராஜேந்திரன், லட்சுமணன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திர நாட்டார் கலந்து கொண்டு பேசினார்.

நாகை அக்கரைக்குளத்தை சீரமைக்க 2018-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கான்கிரீட் சுவர், படித்துறை, தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இந்த பணிகளை உடனே முடிக்க வேண்டும். மேலும் சிக்கல் - அக்கரைக்குளம் வரை தேவநதி வாய்க்கால் தூர்ந்த நிலையில் உள்ளது. இதனை விரைவாக தூர்வார வேண்டும்.

குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அக்கரைக்குளம் வடகரை சாலை பாலம் அபாய நிலையில் உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக அக்கரைக்குளத்தை சீரமைக்கும் பணிகளை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்களான ராமலிங்கம், ஷியாம் சுந்தர், சரவணன், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக ஆர்வலர் விஜயமணி நன்றி கூறினார்.

Next Story