இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 May 2019 4:30 AM IST (Updated: 31 May 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் விஜய் என்கிற விஜயகுமார்(வயது 29). கூலித்தொழிலாளி. இவர் பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி வாலிகண்டபுரம் அருகே உள்ள முருக்கன்குடி வனப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அந்த பெண்ணை, விஜயகுமார் வலுக்கட்டாயமாக கற்பழித்தார். இந்நிலையில் அதே மாதத்தில் விஜயகுமாருக்கு, அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமணம்செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இதனை அறிந்த அந்த பெண், தனது உறவினர்களுடன் சென்று விஜயகுமாரிடம் தன்னை திருமண செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுத்த விஜயகுமார் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியும், கட்டையால் அடித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் விஜயகுமார் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பாக வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டுடில் நடந்து வந்தது.

12 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

நேற்று இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு அளித்தார். பெண்ணை கற்பழித்ததற்காக விஜயகுமாருக்கு 12 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ஏமாற்றியதற்காக 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி விஜயகாந்த் அதிரடி தீர்ப்பை வழங்கினார். இந்த சிறை தண்டனை அனைத்தையும் விஜயகுமார் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென அந்த தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வினோத்குமார் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தண்டனை விதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு திருமணமாகி மனைவி உள்ளதும், அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story