முதுவத்தூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 8 பேர் காயம்


முதுவத்தூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 8 பேர் காயம்
x
தினத்தந்தி 30 May 2019 10:45 PM GMT (Updated: 30 May 2019 9:03 PM GMT)

முதுவத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

கல்லக்குடி,

புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூர் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி கிராம முக்கியஸ்தர்கள் நேற்று காலை 10 மணிக்கு அய்யனார் மற்றும் ஆனையடியான் கருப்பு கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, ஊர்வலமாக ஜல்லிக்கட்டு திடலுக்கு வந்தனர். திருச்சி மண்டல கால்நடை இணை இயக்குனர் டாக்டர் தேவதாஸ் தலைமையில் மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டை லால்குடி கோட்டாட்சியர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அனைவரும் கால்நடைகளை துன்புறுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 329 காளைகளில் 5 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இதையடுத்து 324 காளைகள் களமிறக்கப்பட்டன. சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் பனியன்கள் அணிந்த 100 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர்.

இதில் காளைகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர். இதில் கையில் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற 7 பேரும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் அதிக மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு, சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

திருச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு தலைமையில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 6 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வருவாய்த்துறையினர், மருத்துவ துறையினர், தீயணைப்பு துறையினர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story