2 விமானங்கள், 3 ரேடார்கள் பயன்படுத்த முடிவு பெங்களூரு, உப்பள்ளியில் செயற்கை மழைக்கு நடவடிக்கை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா தகவல்


2 விமானங்கள், 3 ரேடார்கள் பயன்படுத்த முடிவு பெங்களூரு, உப்பள்ளியில் செயற்கை மழைக்கு நடவடிக்கை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா தகவல்
x
தினத்தந்தி 31 May 2019 4:00 AM IST (Updated: 31 May 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு, உப்பள்ளியில் செயற்கை மழைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2 விமானங்கள், 3 ரேடார்கள் இதற்கு பயன்படுத்தப்பட இருப்பதாகவும் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

பெங்களூரு, 

பெங்களூரு, உப்பள்ளியில் செயற்கை மழைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2 விமானங்கள், 3 ரேடார்கள் இதற்கு பயன்படுத்தப்பட இருப்பதாகவும் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

ஆண்டுதோறும் வறட்சி

கர்நாடக அரசின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை சார்பில் செயற்கை மழை குறித்த கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி கிருஷ்ண பைரே கவுடா கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

உலகின் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள் உண்டாகின்றன. இந்தியாவிலும் இந்த காரணத்தால், பருவமழை பொழிவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆண்டுதோறும் வறட்சி ஏற்படுகிறது.

வறட்சிக்கு தீர்வு

செயற்கை மழை திட்டத்தை அமல்படுத்துவதின் மூலம் வறட்சி ஏற்படுவதை ஓரளவுக்கு தடுக்க முடியும். வறட்சிக்கு தீர்வு காண செயற்கை மழை ஒன்று மட்டுமே போதாது. நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அப்போது தான் வறட்சியை தடுக்க முடியும்.

‘ஜல அம்ருத’ என்ற திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு செயற்கை மழை திட்டத்தை அமல்படுத்தினோம். இது வெற்றி பெற்றது. இதன் மூலம் 2½ டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) முதல் 5 டி.எம்.சி. நீர் கூடுதலாக கிடைத்தது.

27 சதவீதம் கூடுதல் மழை

இந்த செயற்கை மழை திட்டத்தால் 27 சதவீதம் கூடுதல் மழை கிடைத்தது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு செயற்கை மழை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு மழை குறைவாக பெய்துள்ளது. இது ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதிய மழை பெய்யாவிட்டால், மீண்டும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் தான் செயற்கை மழையை பெய்விக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மூன்று ரேடார்கள், 2 விமானங்களை பயன்படுத்தி, பெங்களூரு மற்றும் உப்பள்ளி ஆகிய 2 இடங்களில் செயற்கை மழை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

பொறுப்பு குழு

இந்த திட்டத்தை வெற்றி பெற வைக்க பொறுப்பு குழு, ஆலோசனை குழு, மதிப்பீட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா பேசினார்.

Next Story