குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கோரிக்கை


குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 31 May 2019 4:15 AM IST (Updated: 31 May 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு, ஆஸ்டின் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில ஊர்களில் 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மழை பெய்யாததாலும், கடுமையான வெப்பத்தின் காரணமாகவும் பல்வேறு குளங்களில் தண்ணீர் வற்றிப்போய் இருக்கிறது. ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் இல்லை.

எனவே, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. பல ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து உள்ளது. இதனால், சரியாக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.

பல கிராமங்களில் கழிவுநீர் ஓடைக்கு உள்ளாக குடிநீர் குழாய்கள் செல்வதால், குடிநீருடன் கழிவு நீரும் சேர்ந்து வருகிறது. பல இடங்களில் குடிநீருக்கு பயன்படுத்தும் மின் மோட்டார்கள் பழுதடைந்து உள்ளதால் குடிநீர் சரியாக வினியோகம் செய்யமுடியவில்லை.

நடவடிக்கை

எனவே, மாவட்ட கலெக்டர், ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேவையான இடங்களில் புதிய ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தும், மின் மோட்டார்கள் மற்றும் குடிநீர் குழாய்களை பழுது நீக்கி பொதுமக்களுக்கு தினமும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற 5-ந்தேதி முதல் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிகாரிகளை நேரில் சந்தித்து குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்வேன்.

இவ்வாறு ஆஸ்டின் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story