தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி துப்புரவு பணியை மேற்கொள்ளாமல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி துப்புரவு பணியை மேற்கொள்ளாமல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 31 May 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கத்தில் தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி துப்புரவு பணியை மேற்கொள்ளாமல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அய்யங்குளம் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 45). இவர் பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி தேவதாஸ் சக துப்புரவு தொழிலாளர்கள் 10 பேருடன் பேரம்பாக்கம் திருவள்ளூர் சாலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

தேவதாஸ் மாட்டு வண்டியில் குப்பைகளை எடுத்தவாறு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த வசந்த், அருண் ஆகியோர் மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிளை மோதினார்கள். இதை தட்டிக்கேட்ட தேவதாசை, வசந்த், அருண் இருவரும் தகாத வார்த்தையால் பேசி கத்திமுனையில் மிரட்டி தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து தேவதாஸ் மப்பேடு போலீசில் புகார் செய்தார்.

ஆனால் போலீசார் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பேரம்பாக்கம் ஊராட்சியில் பணிபுரியும் 11 துப்புரவு தொழிலாளர்களும் கடந்த 2 நாட்களாக பேரம்பாக்கம் பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் 11 பேரும் பேரம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேவதாசை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரவதனம் மற்றும் மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் துப்புரவு தொழிலாளியை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story