கள்ளக்குறிச்சி பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர் - 28 பவுன் நகை மீட்பு
கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28 பவுன் நகை மீட்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே ரோடுமாமனந்தல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு நேற்று முன்தினம் இரவு 3 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் படுத்திருந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மாரியம்மன் கோவில் அருகில் படுத்திருந்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், விக்கிரவாண்டி அருகே உள்ள மேமூர் பகுதியை சேர்ந்த மலையனூரான் மகன் மதுபாலன் (வயது 26), சின்னதம்பி மகன் ராஜி(28), ராமசாமி மகன் ராஜா(30) என்பதும், ரோடுமாமனந்தல் பகுதியில் உள்ள வீடுகளில் திருடுவதற்காக மாரியம்மன் கோவில் அருகில் படுத்துக்கொண்டு நோட்டமிட்டதும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு விளம்பார் பகுதியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருடியதும், மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாலன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 28 பவுன் நகைகள், ரூ.18 ஆயிரம் மற்றும் ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story