இளையான்குடியில் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தல்


இளையான்குடியில் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jun 2019 4:00 AM IST (Updated: 1 Jun 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடியில் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இளையான்குடி,

இளையான்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டுவருவதால் குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் தொழில், வியாபாரம் செய்பவர்கள் மின்தடையால் பாதிப்படைந்து உள்ளனர். தற்போது முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் இந்த பகுதியில் உள்ள கீழாயூர், சேதுகுடி, சாத்தனி, கருஞ்சுத்தி ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் இதுபோன்று அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையொட்டி மின்வாரியம் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இளையான்குடி பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, இங்குள்ள காமராஜர் தெருவில் தொடர்ந்து மாதக்கணக்கில் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை எனவும் புகார் கூறுகின்றனர். இதுபற்றி இளையான்குடி செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தெருக்கள் தொடர்ந்து இருட்டாக இருப்பதால், திருட்டு பயமும், சமூக விரோத செயலும் அடிக்கடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர். மின்வாரியத்தின் பணி பாராட்ட தகுந்தபடி உள்ள நிலையில் இதுபோன்று தொடர் மின்வெட்டை சீர் செய்யாதது வருத்தமளிக்கிறது. முஸ்லிம்களின் ரம்ஜான் பெருநாளுக்கு சில நாட்களே உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story