திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கையில் இருந்து ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடம் 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது பக்தர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்படுமா?
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை தொகையில் இருந்து எடுத்த ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டிடம் 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இந்த கட்டிடத்தை பக்தர்கள் தங்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கிரிவலப்பாதையில் கோவிலுக்கு சொந்தமான காலி இடம் இருந்து வந்தது. அதை ஆக்கிரமிக்க பலர் முயற்சி செய்தனர். ஆக்கிரமிப்பை தவிர்க்கும்பொருட்டு முருகன் கோவில் நிர்வாகம், அந்த இடத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்தது. அதன்படி காலியாக கிடந்த இடத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சம் செலவில் புதியதாக கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்திற்கு மின் வசதியும் பெறப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியபடியே கிடக்கிறது.
கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடமில்லாமல் அவ்வப்போது தத்தளித்து வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டுக்கு இந்த கட்டிடத்தை திறந்துவிட்டால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்களிடம் கணிசமான தொகையை கட்டணமாக பெற்றால், கோவிலுக்கு வருமானமும் கிடைக்கும். ஆனால் கோவில் நிர்வாகம் அதை எண்ணி பார்க்காத நிலை உள்ளது.
முருகன் கோவில் உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கை தொகையில் இருந்து ரூ.20 லட்சம் எடுக்கப்பட்டு, வீணாக கட்டிடத்தில் முடங்கிப்போய் உள்ளது. இதற்கு காரணம் இந்த கோவிலுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய துணை கமிஷனர் மற்றும் அலுவலக சூப்பிரண்டு நியமிக்கப்படவில்லை. கோவிலுக்கான பொறுப்பு அதிகாரி வாரத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு வந்து செல்லுவது அரிதாக உள்ளது. அந்த அதிகாரி அழகர்கோவிலில் உள்ளதால், கோவில் நிர்வாக காரணங்களுக்காக கோவில் ஊழியர்கள் தான் அடிக்கடி அழகர்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
இதனால் திருப்பரங்குன்றம் கோவிலின் பல்வேறு பணிகள் முடங்கிபோய் உள்ளது. அதில் ஒன்றாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக பூட்டி கிடப்பதில் யாருக்குப்பயன் என்பது தெரியவில்லை. இதற்கிடையே இந்த கட்டிடத்தை சமூகவிரோத செயல்களுக்காக விஷமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதை தவிர்க்க பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.