விக்கிரவாண்டி- தஞ்சை 4 வழிச்சாலைக்காக 2½ ஏக்கர் வாழைத்தோப்பு அழிப்பு; இழப்பீடு கேட்டு விவசாயி போராட்டம்


விக்கிரவாண்டி- தஞ்சை 4 வழிச்சாலைக்காக 2½ ஏக்கர் வாழைத்தோப்பு அழிப்பு; இழப்பீடு கேட்டு விவசாயி போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:45 AM IST (Updated: 1 Jun 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக 2½ ஏக்கர் வாழைத்தோப்பு அழிக்கப்பட்டதால் இழப்பீடு கேட்டு விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பனந்தாள்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி-தஞ்சை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அணைக்கரை, திருப்பனந்தாள், சோழபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அல் ஜாமிஆ தெருவைச் சேர்ந்த விவசாயி இக்பால்(வயது 58) என்பவர், திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இதில் 2½ ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார். இக்பால் சாகுபடி செய்துள்ள வாழைத்தோப்பு வழியாக விக்கிரவாண்டி-தஞ்சை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இக்பால் சாகுபடி செய்துள்ள வாழைத்தோப்பில் வாழைகள் அனைத்தும் வெட்டும் பருவத்தை அடைந்துள்ளதால் தனக்கு ஒரு மாதம் காலம் அவகாசம் வேண்டும் என்று சாலைப் பணி அதிகாரியிடம் இக்பால் முறையிட்டுள்ளார். ஆனால் நேற்று முன்தினம் நான்கு வழி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட சாலைப்பணியாளர்கள், விவசாயி இக்பால் சாகுபடி செய்து இருந்த ஒரு ஏக்கர் வாழைத்தோப்பை அழித்து பணிகளை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இக்பால், 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக வாழைத்தோப்பு அழிக்கப்பட்டதால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனாலும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தாமல் நேற்று மீண்டும் இக்பால் சாகுபடி செய்து இருந்த மேலும் 1½ ஏக்கர் வாழைத்தோப்பையும் அழித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி இக்பால் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான விவசாயிகள் அங்கு வந்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். விவசாயிகள் அங்கு திரண்டு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து விவசாயி இக்பால் கூறியதாவது:-

திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாய பம்பு செட்டுடன் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். மேலும் அரசு ஆவணத்தில் குத்தகை உரிமைதாரராக பதிவு செய்து முறையாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் 2½ ஏக்கர் நிலத்தில் கடந்த ஒரு ஆண்டாக ரூ.3 லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்து வந்தேன். தற்போது வெட்டும் தருவாயில் இருப்பதால் ரூ.5 லட்சம் வரை எனக்கு கிடைக்கும். இந்த நிலையில் சாலைப்பணிக்காக வாழைத்தோப்பை அழித்து விட்டதால் எனக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதில் நில உரிமையாளருக்கு மட்டும் இழப்பீடு வழங்காமல், பயிரிட்ட குத்தகைதாரருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளேன். வாழைத்தோப்பை அழித்த ஆவணத்தை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பித்து இழப்பீடு பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story