விருதுநகர் புறநகர் பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்கள்; குற்றப்பிரிவு போலீசார் துப்புதுலக்காத நிலை
விருதுநகர் புறநகர் பகுதியில் தொடர்ந்து நடக்கும் திருட்டு சம்பவங்களில் குற்றப்பிரிவு போலீசார் துப்புதுலக்காத நிலை நீடிப்பதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் புறநகர் பகுதிகளில் உள்ள லட்சுமிநகர், என்.ஜி.ஓ. காலனி, மீனாட்சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து வீடு புகுந்து திருடி செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பெரும்பாலும் அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் உள்ளிட்ட நடுத்தரபிரிவை சேர்ந்தவர்களின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது பற்றி புறநகர் போலீசாரிடம் புகார்கள் கொடுத்துள்ள போதிலும் போலீசார் வழக்குகள் பதிவு செய்வதோடு, தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதி மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலை தொடர்கிறது.
கடந்த காலங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தால் குற்றப்பிரிவு போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு குறுகிய கால அவகாசத்தில் திருட்டு வழக்கில் துப்புதுலக்கி தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடைமுறையும் தொடர்ந்தது. திருட்டு சம்பவம் நடந்துள்ள முறையை வைத்தே எந்த நபரில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதை கணித்து சம்மந்தப்பட்ட நபர்களை தொடர்ந்து கண்காணித்து துப்புதுலக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது உண்டு. ஆனால் தற்போதைய நிலையில் குற்றப்பிரிவு போலீசார் எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனபோக்கை கடைபிடிப்பதாகவே பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறும நிலை உள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் குற்றப்பிரிவுக்கு என நியமிக்கப்பட்டுள்ள போலீசார் அது தொடர்பான பணிகளை செய்யாமல் மாற்று பணிகளை செய்ய வற்புறுத்தப்படுவதால், திருட்டு வழக்குகளில் துப்புதுலக்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
மாதந்தோறும் குற்றவழக்குகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஆய்வு கூட்டம் நடத்தினாலும் குற்ற வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படாததால் தான் குற்ற வழக்குகளில் துப்புதுலக்கும் நிலையில் முடக்கம் ஏற்படுவதாக கருதப்படுகிறது. எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் விருதுநகர் புறநகர் பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு திருட்டு வழக்குகளில் துப்புதுலக்குவதற்கும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.