மேலூர் அருகே மழை வேண்டி மஞ்சுவிரட்டு; 300 காளைகள் சீறிப்பாய்ந்தன


மேலூர் அருகே மழை வேண்டி மஞ்சுவிரட்டு; 300 காளைகள் சீறிப்பாய்ந்தன
x
தினத்தந்தி 1 Jun 2019 10:00 PM GMT (Updated: 1 Jun 2019 8:31 PM GMT)

மேலூர் அருகே சேண்டலைப்பட்டி கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 300 காளைகள் சீறிப்பாய்ந்தன.

மேலூர்,

மேலூர் அருகே சேண்டலைப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சோலை ஆண்டாள் மற்றும் கணபதி கோவில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த கிராம கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மழை வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் அங்குள்ள கண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

முன்னதாக மஞ்சுவிரட்டில் கலந்துகொள்வதற்காக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300–க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு களத்தில் அழைத்து வரப்பட்டிருந்தன. மேலும் சேண்டலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

முன்னதாக கிராம பெரியவர்களால் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் மஞ்சுவிரட்டு தொடங்கியது. இதனை காண ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதையடுத்து மஞ்சுவிரட்டு களத்தில் அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் விரட்டிச் சென்று அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் தப்பியோடின. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். முடிவில் மஞ்சுவிரட்டில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story