திருத்தங்கல் அருகே பரிதாபம் கல் குவாரி தண்ணீரில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
திருத்தங்கல் அருகே கல் குவாரி தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவரும், பள்ளிக்கூட மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருத்தங்கல்,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. அவருடைய மகன் விஜயராஜா (வயது 19). கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தனது உறவினரான திருத்தங்கல் அதிவீரன்பட்டியில் உள்ள முத்தையா என்பவரது வீட்டுக்கு வைகாசி பொங்கல் திருவிழாவுக்கு வந்திருந்தார்.
திருவிழா முடிந்த நிலையில் விஜயராஜாவும் முத்தையாவின் மகனான ரூபனும்(11) அந்த பகுதியிலுள்ள கல் குவாரிக்கு சென்றுள்ளனர். அங்கு தேங்கி கிடந்த தண்ணீரை பார்த்ததும் அதில் இறங்கி குளிக்க 2 பேரும் முடிவு செய்ததாக தெரிகிறது. தண்ணீரில் இறங்கிய ரூபன் எதிர்பாராத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். இதனால் அவன் தண்ணீரில் மூழ்கினான்.
அவனை காப்பாற்ற சென்ற விஜயராஜாவும் தண்ணீரில் மூழ்கினார். சிறிதுநேரத்தில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பல இடங்களில் அவர்களை தேடினர். இந்தநிலையில் கல்குவாரியில் 2 பேரின் உடல்களும் மிதந்தன.
இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்த ரூபன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.