உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி - புதுச்சேரி தி.மு.க. வலியுறுத்தல்
உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கவேண்டும் என்று புதுச்சேரி தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
புதுவை தெற்கு மாநில தி.மு.க. செயற்குழு கூட்டம் கழக தலைமை அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன் வரவேற்று பேசினார்.
துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதா குமார், பொருளாளர் சண்.குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சீத்தா.வேதநாயகம், முன்னாள் மாநில பிரதிநிதி வி.ஜே.ரமேஷ், மொழிப்போர் தியாகி நந்திவர்மன் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* கருணாநிதியின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவுக்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் கலந்துகொள்வது.
* தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தேடித்தந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற, தட்டாஞ்சாவடி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது. வெற்றியை தேடித்தந்த மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது.
* நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. அவரை இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்வதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் கூடுதல் பலம் கிடைக்கும். எனவே உதயநிதி ஸ்டாலினை மாநில இளைஞர் அணி செயலாளராக நியமிக்க தலைவர் மு.க.ஸ்டாலினை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுவை வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சரித்திர புகழ் பெற்ற வெற்றியை பெற்றுள்ளது. புதுவை தட்டாஞ்சாவடி உள்ளிட்ட இடைத்தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளோம். மேலும் உதயநிதி, பம்பரமாக சுழன்று தேர்தல்களில் வெற்றி கனியை பறித்திட உதவியாக இருந்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். அவருக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கி அவர் ஒரு எம்.எல்.ஏ.வாக வாய்ப்பையும் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் சபரீசனுக்கு எம்.பி. பதவியை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் புதுவையில் நடைபெற உள்ள வெற்றிவிழா பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எஸ்.பி.சிவக்குமார் கூறியுள்ளார்.
இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. இளைஞர் அணி மேலும் வலுவுடன் செயல்பட கழகத்தில் உள்ள சார்பு அணிகளில் முதன்மையான அணியாக இருக்கும் இளைஞர் அணிக்கு தகுதி வாய்ந்தவரான உதயநிதியை மாநில செயலாளராக நியமிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.