மணல் குவாரியில் பங்குதாரராக சேர்ப்பதாக டாக்டரிடம் ரூ.51½ லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு


மணல் குவாரியில் பங்குதாரராக சேர்ப்பதாக டாக்டரிடம் ரூ.51½ லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 2 Jun 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

மணல் குவாரியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி டாக்டரிடம் ரூ.51½ லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மலைக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் நிசாம் காலனியை சேர்ந்தவர் டாக்டர் சண்முகம். இவர் மணல் குவாரி மூலம் விற்பனை தொழில் செய்ய ஆசைப்பட்டார். இது தொடர்பாக செல்வம் உள்ளிட்ட 3 பேரை அவர் சந்தித்தார்.

அவர்கள், முசிறியில் உள்ள மணல் குவாரியை நடத்த அனுமதி பெற்று பங்குதாரர்களாக சேர்ந்து தொழில் செய்ய உறுதி அளித்து, டாக்டர் சண்முகத்திடம் ரூ.51 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றனர். ஆனால், சொன்னபடி மணல் குவாரிக்கு அனுமதி பெற்று தொழில் செய்வதற்கான எவ்வித முயற்சியையும் செல்வம் உள்பட 3 பேரும் எடுக்கவில்லை.

இதனால், டாக்டர் சண்முகம் தான் கொடுத்த தொகையை திரும்ப தருமாறு 3 பேரிடமும் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததுடன் அவதூறாக பேசி, சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் சண்முகம், திருச்சி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், என் பணத்தை மோசடி செய்த செல்வம் உள்பட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை திரும்ப பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த கோர்ட்டு, புகார் குறித்து திருச்சி கோட்டை போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவின்பேரில் செல்வம் உள்பட 3 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story