கண்ணமங்கலம் அருகே கூட்டுறவு கடன் சங்க காசாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கண்ணமங்கலம் அருகே கூட்டுறவு கடன் சங்க காசாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மேல்நகர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் ஏழுமலை (வயது 34). இவர் மேல்நகர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா (30), வீட்டின் அருகே சிறிய பெட்டிக்கடையில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர்களுக்கு சாய்சுரேஷ் (3) என்ற மகனும், தனுஸ்ரீ (1) என்ற மகளும் உள்ளனர்.
ஏழுமலை பணிநிமித்தமாக கோவை சென்று உள்ளார். இதனால் தீபா நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள அவரது சகோதரர் பன்னீர்செல்வம் வீட்டில் குழந்தைகளுடன் தூங்க சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு வீட்டின் முன் பக்க கதவு மற்றும் பூட்டை உடைத்து வீட்டினுள் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி., ரூ.10 ஆயிரம், 2½ பவுன் நகை மற்றும் 200 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த ஏழுமலை கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததையும், டி.வி. போன்றவை திருட்டு போயிருப்பதையும் கண்டார்.
இதுகுறித்து அவர் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மர்மநபர்கள் வந்து சென்ற செருப்பு தடம் வீட்டைச் சுற்றியுள்ள நிலத்தில் பதிவாகி இருந்தது. கண்ணமங்கலம் பகுதியில் அடிக்கடி நடைபெற்று வரும் தொடர் திருட்டுகள் காரணமாக பொதுமக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.
இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உடனடியாக தனிப்படைகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story