காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை ‘டிஸ்மிஸ்’ செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் அய்யாக்கண்ணு பேட்டி


காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை ‘டிஸ்மிஸ்’ செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 11:15 PM GMT (Updated: 2 Jun 2019 7:26 PM GMT)

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை ‘டிஸ்மிஸ்’ செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பழனிவேல், துணை தலைவர் கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அய்யாக்கண்ணு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கோதாவரி- காவிரி நதிகள் இணைக்கப்படும் என்று அறிவித்ததற்கும், சிறு குறு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதற்கும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படியும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. மாதா மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரை வழங்கவில்லை. விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என போராடி வருகிறோம். ஆனால் இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை.

இம்மாத இறுதிக்குள் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறோம். அப்போது காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும் என கோரிக்கை வைப்போம். அவர்கள் எங்களை சந்திக்க மறுத்தாலோ, கோரிக்கையை ஏற்கவில்லை என்றாலோ டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்த இடுக்கி மாவட்டம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரளாவிற்கு சென்று விட்டது. இடுக்கி மாவட்டத்தில் தான் மழை நன்றாக பெய்கிறது. இந்த தண்ணீர் வளத்தை நாம் பெறுவதற்காக எல்லை கல்லை மாற்றி நடவேண்டும். இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story