தஞ்சை மாவட்டத்தில் பத்திரங்கள் கடும் தட்டுப்பாடு கூடுதல் விலைக்கு விற்பதால் பொதுமக்கள் அவதி


தஞ்சை மாவட்டத்தில் பத்திரங்கள் கடும் தட்டுப்பாடு கூடுதல் விலைக்கு விற்பதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 3 Jun 2019 3:45 AM IST (Updated: 3 Jun 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பத்திரங்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

ஒரு சொத்து யாருக்கு உரிமை என்பதை அரசாங்கத்தின் மூலமாக உறுதிப்படுத்தி கொள்ளும் ஆவணம் தான் பத்திரம். ஒரு குறிப்பிட்ட நிலத்தை தற்போதைய உரிமையாளருக்கு முன்பு யாரிடம் இருந்து யார் வாங்கினார்கள் என்பதை அறிந்து கொள்ளக்கூடிய ஆவணம் மூலப்பத்திரம்.

சொத்து பரிவர்த்தனை, வாடகை ஒப்பந்தம், வணிக ஒப்பந்தம், வங்கிகளில் கடன் பெறுதல் உள்ளிட்ட ஆவணங்களை தயாரிக்க பத்திரம் தேவை. இந்த பத்திரங்கள் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என பல்வேறு கட்டணங்களில் விற்பனை செய்யப் படுகிறது. மாத வாடகைக்கு வீட்டில் குடியிருப்பதை விட ஒத்திக்கு குடியிருப்பதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அப்படி ஒத்திக்கு குடியிருப்பவர்கள் குறிப்பிட்ட தொகையை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்து 3 ஆண்டுகளுக்கு அந்த வீட்டில் குடியிருக்க ஒப்பந்தம் செய்வார்கள். அப்படி ஒப்பந்தம் செய்பவர்கள் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

கடும் தட்டுப்பாடு

இதேபோல வணிக ஒப்பந்தம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது போன்றவற்றிற்கு 20 ரூபாய் மதிப்பு பத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்று பல்வேறு தேவைகளுக்கு பத்திரங்கள் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. இதனால் பத்திரங்கள் அதிக அளவில் விற்பனையாவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக தஞ்சை மாவட்டத்தில் பத்திரங்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் பத்திர விற்பனையாளர்கள், எந்த மாவட்டங்களில் பத்திரங்கள் இருப்பு இருக்கிறதோ அந்த மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதாவது ஒரு பத்திரத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தட்டுப்பாடு நிலவினால் இவற்றின் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

தமிழக அரசு காரணமா?

மக்களின் எல்லா தேவைகளுக்கும் பயன் படக்கூடிய பத்திரங்கள் மராட்டிய மாநிலம் நாசிக் என்ற இடத்தில் அச்சடிக்கப்படுகிறது. அவர்கள் இஷ்டப்படி பத்திரங்களை அச்சடிக்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு பத்திரங்கள் தேவை என்பதை அந்தந்த மாநில அரசு தெரியப்படுத்தும். அதன் அடிப்படையில் தான் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் மாவட்டங்கள் தோறும் பத்திரங்கள் பிரித்து அனுப்பி வைக்கப்படும். மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பப்படும் பத்திரங்கள் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் உள்ள சார்நிலை கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பத்திர விற்பனையாளர்கள் பத்திரங்களை வாங்கி விற்பனை செய்வார்கள்.

ஆனால் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை தற்போது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு முறை ஆன்லைனில் நடைபெற்று வருவதால் பத்திரத்தின் தேவை அதிகமாக இருக்காது என்ற காரணத்தினால் பத்திரம் அச்சடிக்க தமிழக அரசு ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாகவே பத்திரம் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை

இது குறித்து தஞ்சை வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் கோ.அன்பரசன் கூறும்போது, வங்கிகளில் வீட்டுக்கடன், தொழில்கடன், கல்விக்கடன் பெறுவதற்கு பத்திரங்கள் தேவைப்படுகிறது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெறுவதற்கும் பத்திரம் அவசியம் தேவை. பிறப்பு, இறப்பு உறுதிமொழிக்கும், எல்.ஐ.சி. பாலிசி பாண்டு தொலைந்து போனாலும், மின்சார இணைப்பு பெயர் மாறுதல் செய்வதற்கும், லைசென்ஸ் காணாமல் போனாலும் திரும்ப பெறுவதற்கும், திருமணங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கும், பத்திரத்தின் தேவை அவசியம்.

புதிதாக பெட்ரோல் விற்பனை நிலையம், மருந்துக்கடை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் அதற்காக விண்ணப்பிக்கும்போது பத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி பல்வேறு தேவைகளுக்கு அடிப்படையாக இருக்கும் பத்திரங்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டாலும் மக்களின் பிற தேவைகளுக்கு பத்திரங்கள் அவசியமாகிறது. எனவே தட்டுப்பாடு இன்றி பத்திரங்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story