சூலூர் அருகே அரசு ஆஸ்பத்திரி நர்சு மர்மச்சாவு; சந்தேகம் இருப்பதாக கூறி, கணவர் குடும்பத்தினர் சிறைபிடிப்பு


சூலூர் அருகே அரசு ஆஸ்பத்திரி நர்சு மர்மச்சாவு; சந்தேகம் இருப்பதாக கூறி, கணவர் குடும்பத்தினர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 4:45 AM IST (Updated: 3 Jun 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

சூலூர் அருகே அரசு ஆஸ்பத்திரி நர்சு மர்மமான முறையில் இறந்தார். அதில் சந்தேகம் இருப்பதாக கூறி, கணவர் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டனர்.

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலை சீனிவாசா நகரை சேர்ந்தவர் முரளி சங்கர் (வயது30). இவர் அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பாண்டி மீனா (24). இவர்களுக்கு அஸ்மிதா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது.

பாண்டி மீனா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.வாடிப்பட்டி ஆகும்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் முரளி சங்கர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அவர் பணிமுடிந்து இரவு வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டில் பாண்டி மீனா படுக்கை அறையில் தூக்கில் தொங்கியநிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முரளி சங்கர் மனைவியை காப்பாற்ற தூக்கில் இருந்து இறக்கினார். இதில் அவர் இறந்துபோனது தெரியவந்தது.

இது குறித்து பாண்டி மீனாவின் பெற்றோருக்கு முரளி சங்கர் தகவல் தெரிவித்தார். உடனே ஒரு பஸ்சை வாடகைக்கு பிடித்து பாண்டி மீனாவின் உறவினர்கள் 100 பேர் சூலூர் வந்தனர்.

அவர்கள், பாண்டி மீனாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்றும், கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்க விட்டு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் கூறினார்கள்.

இதில் ஆவேசம் அடைந்த சிலர் முரளி சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறைபிடித்தனர். இதனால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உடனே அவர்கள், ஆர்.டி.ஓ. நேரில் வந்தால்தான் உடலை எடுக்க விடுவோம். சிறைபிடிக்கப்பட்ட முரளி சங்கரின் குடும்பத்தினரையும் விடுவிப்போம் என்று கூறி வீட்டின் முன்பு அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரேத பரிசோதனையின் முடிவில்தான் பாண்டி மீனா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என அறிய முடியும் என சூலூர் போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து உடலை எடுக்க காலை 10.45 மணிக்கு பாண்டி மீனாவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பாண்டிமீனாவின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரி நர்சு இறந்தது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாண்டி மீனாவுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாண்டி மீனாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள், அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பாண்டி மீனா வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தப்பட்டார். எனவே அவருடைய இறப்பு சந்தேகமாக உள்ளது. எனவே கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், வரதட்சணை கொடுமைப்பிரிவு சேர்க்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்று பாண்டிமீனாவின் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர்.

Next Story