சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு: அருப்புக்கோட்டையில் பெண் வக்கீல் தற்கொலை முயற்சி


சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு: அருப்புக்கோட்டையில் பெண் வக்கீல் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 2 Jun 2019 11:30 PM GMT (Updated: 2 Jun 2019 8:12 PM GMT)

அருப்புக்கோட்டை அருகே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டருடன் ஏற்பட்ட தகராறில் பெண் வக்கீல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் காஞ்சனாதேவி (வயது 26). இவருக்கும், அவரது சித்தப்பாவான மாரியப்பனுக்கும் (52) குடும்ப தகராறில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மாரியப்பன் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காஞ்சனாதேவி பந்தல்குடி போலீசில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு அவரை போலீசார் அழைத்துள்ளனர். அவருடன் அவரது தங்கையும், தற்போது வக்கீலுக்கு படித்து முடித்து விட்டு வக்கீலிடம் பயிற்சி எடுத்து வரும் தீபாவும்(22) சென்றுள்ளார்.

பந்தல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி(30) விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கும், தீபாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்தி விட்டதாக கருதிய தீபா மன வேதனை அடைந்து வீட்டுக்கு திரும்பியதும் அங்கிருந்த எறும்பு மருந்தை(விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து தீபா கூறுகையில், சப்-இன்ஸ்பெக்டர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு எங்களது புகாரை வாபஸ் பெறாவிட்டால் எனது அக்காள் கணவர் மீது பொய் வழக்கு போடுவேன் என்றும், என் மீதும் வழக்கு தொடர்ந்து வக்கீல் தொழில் செய்ய விடாமல் செய்து விடுவேன் என்றும் மிரட்டினார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் வக்கீல் விஷம் குடித்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story