உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு: விவசாயிகள்-நில உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்


உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு: விவசாயிகள்-நில உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

உயர் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து க.பரமத்தியில் விவசாயிகள்-நில உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் க.பரமத்தியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் முத்துவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குழந்தைசாமி வரவேற்று பேசினார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத்தலைவர் கொங்கு சண்முகம், வழக்கறிஞர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.வி.ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு உயர்மின் கோபுரம் அமைப்பதால் விவசாயத்திற்கும், ஆடு, மாடு, மனிதர்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை, மற்றும் தமிழக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு போன்றவற்றை விளக்கி கூறினார்கள்.

மேலும் சாலையோரங்களில் நிலத்திற்கு அடியில் கேபிள் அமைக்கவேண்டும். திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியம், கன்னிவாடி பகுதியில் இருந்து ஒரு தனியார் நிறுவனம் மூலம் க.பரமத்தி வரை 35 கிலோ மீட்டர் தூரம் 230 கிலோ வாட் மின்சாரத்தை உயர்மின் கோபுரம் மூலம் கொண்டு வர முயற்சி நடப்பதை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வழக்கறிஞர் பார்த்தசாரதி, விவசாயிகள் மாம்பாடி கந்தசாமி, கோடந்தூர் ராஜாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெடுங்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நல்லசிவம் நன்றி கூறினார். 

Next Story