கோடை விடுமுறைக்கு பிறகு மாவட்டத்தில் அரசு பள்ளிகள் இன்று திறப்பு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு


கோடை விடுமுறைக்கு பிறகு மாவட்டத்தில் அரசு பள்ளிகள் இன்று திறப்பு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 2 Jun 2019 10:45 PM GMT (Updated: 2 Jun 2019 9:26 PM GMT)

கோடை விடுமுறைக்கு பிறகு நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன. இதையொட்டி முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு அரசுபள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது.

இதற்கான தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திருச்செங்கோடு கல்வி மாவட்டம் சார்பிலும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நாமக்கல் கல்வி மாவட்டம் சார்பிலும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கொல்லிமலை

கடைசிநாளான நேற்று நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலகத்தில் இருந்து கொல்லிமலையில் உள்ள பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும் இந்த ஆண்டு 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடபுத்தகம் மாற்றி அமைக்கப்படுவதால் அவற்றிற்கு ஒருசில புத்தகங்கள் மட்டுமே வந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் 8-ம் வகுப்புக்கும் பாடபுத்தகம் மாறுவதால், தற்போது தான் புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வந்து உள்ளன. இந்த புத்தகங்கள் இன்னும் பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை.

6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பெரும்பாலான புத்தகங்கள் வந்து விட்டன. இவை அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன. ஒட்டுமொத்தமாக 60 முதல் 70 சதவீதம் வரை தான் புத்தகங்கள் வந்து இருப்பதாக கூறப்படுகிறது. மீதமுள்ள புத்தகங்களும், நோட்டுகளும் வந்தவுடன் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story