பட்டதாரிகள் விமானப்படையில் சேர்ப்பு : ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களில் ஆண்- பெண் பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 242 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
விமானப்படை நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாகும். தற்போது இந்த படைப்பிரிவில் ‘கமிஷன்டு ஆபீசர்’ பணியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்கேட் (AFCAT 2/2019) என்ற தேர்வு மூலம் பிளையிங், டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. என்.சி.சி. வீரர் களுக்கான சிறப்பு நுழைவின் அடிப்படையிலும் குறிப்பிட்ட பேர் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்திய குடியுரிமை பெற்ற ஆண்/ பெண் பட்டதாரிகள் இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம். மொத்தம் 242 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே...
வயது வரம்பு:
பிளையிங் பிரிவில் சேரும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 24 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1996 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். பைலட் பயிற்சி பெற்றவர்கள் 26 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
டெக்னிக்கல் பிரிவு மற்றும் கிரவுண்ட் டியூட்டி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1994 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந் திருக்க வேண்டும். இந்த தகுதித் தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.
கல்வித்தகுதி:
பிளையிங் பிரிவு பணிக்கு 3 ஆண்டு கால அளவு கொண்ட பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 10, 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். பி.இ., பி.டெக். படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.
எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங் மற்றும் இது சார்ந்த பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.
பல்வேறு விதமான பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமோ, சி.ஏ. போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிகள் காத்திருக்கின்றன.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல்- உள நலம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (அப்கேட்) எனப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற் தகுதி, உடற்திறன் சோதித்தல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் பெறலாம்.
கட்டணம் :
தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளம் வழியாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். careerindianairforce.edac.in மற்றும் afcat.cdac.in என்ற இணையதள முகவரியில் முழுமையான விவரங்களை படித்தறிந்து கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 30-6-2019
இதற்கான ஆன்லைன் தேர்வு ஆகஸ்டு 24,25-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story