கோடை விடுமுறை முடிந்ததையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறை முடிந்ததையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 4 Jun 2019 4:30 AM IST (Updated: 4 Jun 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை முடிந்ததையொட்டி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அரியலூர்,

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அரசு பொதுத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் மாதம் 2-வது வார இறுதியில் இருந்தும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜூன் 3-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பள்ளிகள் திறப்பதை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் எனறு பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகிறது என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் கடந்த சில நாட்களாக பரவி வந்தன. ஆனால் அறிவித்தப்படி பள்ளிகள் ஜூன் 3-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், ஒரு சில தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்த மாணவ- மாணவிகளை, அவர்களுடைய பெற்றோர் நேற்று பள்ளிக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழுப்பி புறப்பட வைத்தனர். சில மாணவ- மாணவிகள் விடுமுறை முடிந்த கவலையிலும், பலர் அடுத்த வகுப்புக்கு செல்லப்போகிறோம், நண்பர்களை மீண்டும் சந்திக்க போகிறோம் என்ற உற்சாகத்திலும் பள்ளிக்கு புறப்பட்டனர். குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் இரு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளியில் விட்டனர். முதன் முதலாக பள்ளிக்கு வந்த குழந்தைகள் பள்ளிக்கு போகமாட்டேன் என்ற பெற்றோரிடம் கூறி, அழுது அடம் பிடித்தனர். இதனால் பெற்றோர் வலுக்கட்டாயமாக குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட்டனர். சில மாணவர்கள் தங்களுடைய நண்பர்களுடன், மாணவிகள் தோழிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பேசியபடி பள்ளிக்கு சென்றனர்.

மேலும் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவ- மாணவிகள் தங்களுடைய உடைமைகள் அடங்கிய பெட்டி, வாளி உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றனர். அவர்களை பெற்றோர் பள்ளியில் கொண்டு வந்து விட்டனர். பள்ளிகளுக்கு வந்திருந்த மாணவ- மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்று இனிப்பு வழங்கினர். இந்நிலையில் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் திறக்கப்படாத தனியார் பள்ளிகள் வருகிற 7-ந் தேதி அல்லது 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story