கோடை விடுமுறை முடிந்து கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்


கோடை விடுமுறை முடிந்து கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 3 Jun 2019 11:00 PM GMT (Updated: 3 Jun 2019 8:19 PM GMT)

கோடை விடுமுறை முடிந்ததை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.

கரூர்,

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. கரூர் மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் நேற்று காலை திறக்கப்பட்டன. பள்ளிக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். புதிதாக பள்ளியில் சேர்ந்தவர்கள் புதிய ஆடையுடன், புத்தக பையை சுமந்தபடி வந்தனர். விடுமுறை காலத்திற்கு பின்னர் சந்தித்ததால் சில மாணவ-மாணவிகள் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

முதலில் பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அப்போது 2019-20-ம் கல்வி ஆண்டில் சிறப்பாக படிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கடவுளை வேண்டிக்கொண்டனர். மேலும் ஆசிரியர்கள் இந்த கல்வி ஆண்டில் புதிதாக கல்வித்துறையில் புகுத்தப்பட்டு உள்ள நடைமுறைகள் குறித்தும், பாடப்புத்தகங்களில் மாற்றம் குறித்தும் எடுத்துக்கூறி, மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து பேசினர். பள்ளியில் வகுப்புகளுக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது என்று பள்ளியில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

பாடப்புத்தகம் வினியோகம்

மாவட்ட கல்வி அதிகாரிகள் சிவராமன் (கரூர்) மற்றும் கபீர் (குளித்தலை) ஆகியோர் தங்களது எல்லைக்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு திடீரென வருகை தந்து, வகுப்பிற்கு சென்ற மாணவ-மாணவிகளை சந்தித்து வாழ்த்து கூறினர். பின்னர் நீண்ட நாளுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர் வருகையில் ஏதும் பாதிப்புள்ளதா? என்பது பற்றி கேட்டறிந்தனர். வகுப்புகள் தொடங்கியதும், தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பக்கங்களை புரட்டி பார்த்தனர். பின்னர் அந்தந்த பள்ளிகளின் கிட்டங்கியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள், நோட்டுகளை பார்வையிட்டனர். அப்போது கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

கரூர் நகராட்சி குமரன் தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சாக்லெட் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே போல், கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி என பல்வேறு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகம் வழங்கப்பட்டு முதல் நாளிலேயே பாடங்கள் நடத்தப்பட்டு கற்றலின் அடிப்படை குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினர். மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளுக்கே வந்து வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் அவர்களது கல்வி தகுதியை பதிவு செய்யும் பணிகள் நடந்தன.இதேபோல் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளுக்கு ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட விலையில்லா உபகரணங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 836-ம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 128-ம் நேற்று திறக்கப்பட்டன. ஒரு சில தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்படுகிறது.

புதிய மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு

குளித்தலை நகரப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பூபதிராஜ் தலைமை தாங்கினார். இப்பள்ளியில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி அருகே உள்ள மகா மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு சுவாமியை வழிபட்ட பின்னர், புதிய மாணவ, மாணவிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். பள்ளி முகப்பு பகுதியில் ஏற்கனவே இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் புதிய மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு அளித்து இனிப்புகள் வழங்கினார்கள். இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story