கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு


கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 Jun 2019 4:30 AM IST (Updated: 4 Jun 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மொத்தம் 214 மனுக்களை பெற்றார். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு பதில் தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், அரவக்குறிச்சி தாலுகா அத்திப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் வல்லாகுளத்துப்பாளையம் மற்றும் வளையகுளத்துபாளையத்துக்கு இடையே சாலைப்பணிகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்துவதற்கான தார் கலவை ஆலை அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த ஆலை தொடங்கப்பட்டால் அதில் இருந்து வெளிவரும் நச்சுப்புகையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்தும் எங்களுக்கு, அந்த ஆலை அமையப்பெற்றால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு தார் கலவை ஆலை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.

காலிக்குடங்களுடன் வந்த மக்கள்

கடவூர் தாலுகா கிழக்குராஜாப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் சரியாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் குடிநீருக்காக பல இடங்களுக்கு அலைகிறோம். எங்கள் ஊரில் உள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டிகளும் பழுதடைந்து உள்ளது. எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்த வேலையில்லா மக்களுக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல் கிருஷ்ணராயபுரம் தாலுகா வீரியபாளையம் கொமட்டேரியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தனர்.

கடவூர் தாலுகா பால்மடைப்பட்டி, தேவர்மலை கிராமம், குருணிகுளத்துப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், குருணிகுளத்துப்பட்டி அருகே கோலப்பொடி தயாரிக்கும் வகையிலான தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இதற்காக கற்களை அரைப்பதற்கான எந்திரமும் அமைக்கப்பட இருக்கிறது. இதில் இருந்து வெளிவரும் தூசுகளால் காற்று மாசடையக்கூடும். சுற்றுப்புற சூழல் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது. மக்களின் உடல் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிவிடும். எனவே கோலப்பொடி தயாரிக்கும் ஆலை அமைப்பதை கைவிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று தெரிவித்திருந்தனர்.

வாய்க்காலை தூர்வார கோரி...

மேலபாளையம் பழைய ஆயக்கட்டு அமராவதி ஆற்று வாய்க்கால் பாசன சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி மற்றும் ராவணன், தங்கவேல் உள்பட விவசாயிகள் அளித்த மனுவில், மேலப்பாளையத்தில் சுமார் 350 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. மேலப்பாளையம் வாய்க்கால் தூர்வாரப்படாததால் முழுமையாக தண்ணீரை பெற முடியவில்லை. எனவே அந்த வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற தெரிவித்திருந்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

நலத்திட்ட உதவி

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,300 மதிப்பில் நவீன அதிரும் மடக்கு குச்சியையும், ஒரு பயனாளிக்கு ரூ.900 மதிப்பில் உடல் தாங்கு கட்டைகளையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி லீலாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேஷ், மாவட்ட மாற்றுத்திறனானிகள் நல அதிகாரி ஜான்சி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story