வரகனேரியில் தனிநபர்கள் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்


வரகனேரியில் தனிநபர்கள் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்
x
தினத்தந்தி 3 Jun 2019 11:00 PM GMT (Updated: 3 Jun 2019 8:35 PM GMT)

திருச்சி வரகனேரியில் தனிநபர்கள் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், திருச்சி பாலக்கரை, வரகனேரி பகுதி பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி துரைசாமிபுரம் 3-வது தெருவில் இருந்து வரகனேரி-பிச்சை நகருக்கு இடையில் உய்யக்கொண்டான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே நீர்நிலைகளை பாதிக்கும் வகையில் மாநகராட்சி, பொதுப்பணித்துறை விதிகளின்படி எவ்வித பாலங்களும் கட்டக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர்களின் செல்வாக்கில் வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்தனர். அந்த பாலம் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக தனிநபர்கள் விதிகளை மாற்றி சுயலாபத்திற்காக மீண்டும் பாலம் அமைக்க முயற்சிக்கிறார்கள். எனவே, பாலம் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையில் சிலர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல் படும் பள்ளிகளை மூடுவதுடன், அப்பள்ளியில் பெற்றோர் செலுத்திய கட்டணங்களை திரும்ப பெற்று கொடுக்க வேண்டும். கல்வி கட்டணத்திற்கான ரசீதுகளை அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் முறையாக தருவதில்லை. எனவே, சரியான ரசீது வழங்க உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கல்விக்கான கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வையில் படும்படி எழுதிவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் இலவச மனைப்பட்டா, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்தனர். 

Next Story