கோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிகள் திறப்பு அழுது அடம்பிடித்த குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர் அழைத்து வந்தனர்


கோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிகள் திறப்பு அழுது அடம்பிடித்த குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர் அழைத்து வந்தனர்
x
தினத்தந்தி 3 Jun 2019 11:00 PM GMT (Updated: 3 Jun 2019 9:05 PM GMT)

கோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. அழுது அடம்பிடித்த குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

நாகர்கோவில்,

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுத் தேர்வு முடிவடைந்ததும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் 3-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதற்காக கடந்த சில நாட்களாகவே பள்ளி செல்லக்கூடிய மாணவ- மாணவிகளும், அவர்களுடைய பெற்றோரும் முன் ஏற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மாணவ- மாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள் தைப்பது, புதிய புத்தகப்பைகள், ஷூ, பென்சில், பேனா, டிபன் பாக்ஸ், நோட்டு- புத்தகங்கள் வாங்குவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் கடைவீதிகளில் கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகமாக இருந்தது.

அடம்பிடித்து அழுத குழந்தைகள்

இந்தநிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த 1½ மாதங்களுக்கு மேலாக நாகர்கோவில் நகரின் முக்கியச்சாலைகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் அமைந்துள்ள சாலைகளில் மாணவ- மாணவிகளை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்கள், ஆட்டோக்களின் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. நேற்று பள்ளிகள் திறந்ததையொட்டி காலை 8 மணியில் இருந்தே நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் மாணவ- மாணவிகளை அவர்களது பெற்றோர் அழைத்துச் செல்வதை காண முடிந்தது. மேலும் இதுவரை ஓய்ந்திருந்த பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களின் போக்குவரத்து மீண்டும் நேற்று முதல் தொடங்கியது. மேல்வகுப்புக்கு செல்லக்கூடிய மாணவ- மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு, முகத்தில் புன்முறுவல் பூக்க பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

அதேநேரத்தில் இதுவரை எவ்வித கட்டுப்பாடும், விதிமுறையும் இன்றி சுற்றித்திரிந்து விளையாடி மகிழ்ந்த சிறுவர்- சிறுமிகள் ஏராளமானோர் நேற்று எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்காக பெற்றோர் சீருடை அணிவித்து அழைத்துச் சென்றனர். பள்ளி சென்றதும் அந்த குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிய மனமின்றி ஓவென சத்தம் போட்டு அழுதனர், அடம்பிடித்து அழுத அந்த குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கூடத்தில் சாக்லெட், தின்பண்டங்கள் தருவார்கள் என்று ஆசைவார்த்தைகள் கூறி, ஏமாற்றி பள்ளியில் விட்டுச் சென்றனர்.

இலவச பாட புத்தகங்கள்

பள்ளி திறக்கும் நாளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும் என்று கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ- மாணவிகள் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதுவரை அனுப்பி வைக்கப்படாத ஒன்றிரண்டு புத்தகங்களைத்தவிர மற்ற பாடப்புத்தகங்கள் அனைத்தும் முதல்நாளான நேற்றே வினியோகம் செய்யப்பட்டதாக குமரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story