உறவுக்கு மறுத்த சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை; 2-வது திருமணம் செய்த கணவர் கைது


உறவுக்கு மறுத்த சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை; 2-வது திருமணம் செய்த கணவர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2019 4:15 AM IST (Updated: 4 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே உறவுக்கு மறுத்த சிறுமி சூடுவைத்து சித்ரவதை செய்யப்பட்டார். அதையொட்டி 2-வது திருமணம் செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அடுத்துள்ள கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் ஜெகதீசன்(வயது 27). கட்டிடத்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்தநிலையில் இவர் கடந்த மாதம் 17-ந்தேதி அங்குள்ள கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் 16 வயது சிறுமியை 2-வதாக கட்டாய திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிறுமியை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் சிறுமி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீசன் அந்த சிறுமியை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார்.

இதில் மனம் உடைந்த அந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து கணவரின் உறவினர்கள் அவரை சமாதானம் செய்தனர். அதன்பின்னரும் சிறுமியை ஜெகதீசன் உறவுக்கு அழைத்தார். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்தார். எனவே இதுகுறித்து ஜெகதீசன் தனது தாயார் வேலுத்தாயிடம் தெரிவித்தார். அதையொட்டி சிறுமி சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த சிறுமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியை தேனியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமிக்கு சூடு வைத்து கொடுமை படுத்தியதாக கணவர் ஜெகதீசன், மாமனார் சின்னச்சாமி, மாமியார் வேலுத்தாய் மற்றும் உறவினர்கள் பேச்சியப்பன், மாரீஸ்வரி, மணி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஜெகதீசனை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்ற 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு செய்து வைக்கப்பட்ட திருமணம் குறித்து சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story