பட்டா வழங்கக் கோரி தாலுகா அலுவலகத்தில் சமையல் செய்து போராட்டம்
பட்டா வழங்கக் கோரி தாலுகா அலுவலகத்தில் சமையல் செய்து போராட்டம் நடத்தப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரில் ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு 35 குடும்பங்களுக்கு தலா 2½ சென்ட் இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்தது. அதில் தங்கள் தகுதிக்கு ஏற்ப குடிசை, ஓட்டு வீடுகளை கட்டி அந்த பகுதி மக்கள் வசித்து வந்தனர். அவர்களது வசிப்பிடத்திற்கு பட்டாவும், மின் இணைப்பும் இன்று வரை கிடையாது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடியும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை.
இந்தநிலையில் தங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து ராஜீவ்காந்தி நகர் மக்கள் ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சாத்தையா ஆகியோர் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் புகும் போராட்டம் நடத்தினர்.
மேலும் தாலுகா அலுவலகம் முன்பு அவர்கள் அடுப்பு வைத்து சமையல் செய்யும் போராட்டத்தை மேற்கொண்டனர். அப்போது பட்டா வழங்க கோரியும் வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த தாசில்தார் பாலாஜி மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் கலெக்டரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த இடத்திற்கு பட்டா வழங்க அரசின் தடை ஆணை உள்ளது அது நீக்கப்பட்டவுடன் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்