குன்றத்தூர் அருகே கார் உதிரிபாக தொழிற்சாலையில் தீ விபத்து


குன்றத்தூர் அருகே கார் உதிரிபாக தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 5 Jun 2019 4:00 AM IST (Updated: 4 Jun 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி,

மயிலாப்பூரை சேர்ந்தவர் அருண். குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட்டில் சொந்தமாக பிளாஸ்டிக் மோல்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார்களுக்கு வேண்டிய பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

இங்கு 60-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். நேற்று அதிகாலை 5 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இன்வெட்டர் பேட்டரி,யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் பேட்டரிகள் வெடிக்க ஆரம்பித்ததால் அங்கிருந்து ஊழியர்கள் வெளியே ஓடி விட்டனர். பெரிய அளவு கொண்ட பேட்டரிகள் என்பதால் தீ விபத்தில் வெடித்து அருகில் இருந்த எந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மீது பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.

இதையடுத்து ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் மற்றும் தயார் நிலையில் இருந்த உதிரி பாகங்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைப்பது மிகவும் சவாலாக இருந்தது. இதையடுத்து பூந்தமல்லி, தேனாம்பேட்டை, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் தயார் நிலையில் இருந்த பொருட்கள், பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், 14 எந்திரங்கள் என ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமானது. மேலும் தீ விபத்தில் தொழிற்சாலையின் மேற் கூரைகள் மற்றும் பக்க வாட்டு சுவர்களில் இருந்த சிமெண்டு பூச்சுகள் உடைந்து கீழே கொட்டியது. இந்த தீ விபத்து குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story