வேலூரில் ஒரே நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மகன்கள், டாக்டர், தொழில் அதிபர் வீடுகளில் ரூ.20 லட்சம் கொள்ளை


வேலூரில் ஒரே நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மகன்கள், டாக்டர், தொழில் அதிபர் வீடுகளில் ரூ.20 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 5 Jun 2019 4:00 AM IST (Updated: 5 Jun 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மகன்கள், டாக்டர், தொழில் அதிபர் வீடுகளில் ரூ.20 லட்சம் கொள்ளை தூங்கியவர்கள் அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

வேலூர்,

வேலூரில் ஒரே நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மகன்கள், டாக்டர், தொழில் அதிபர் வீடுகளில் தூங்கியவர்களை அறையை வெளிப்புறமாக பூட்டியும், ஜன்னலை உடைத்தும் ரூ.20 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மார்க்கபந்துவின் மகன்கள் எழில்மாறன், புகழேந்தி ஆகியோர் வேலூர் சத்துவாச்சாரியில் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களில் எழில்மாறன் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். புகழேந்தி வழக்கறிஞராக இருக்கிறார். எழில்மாறன் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை நேரத்தில் அவருடைய வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் எழில்மாறன் குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அதேபோன்று புகழேந்தியின் மகன் மட்டும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த அறையையும் மர்ம நபர்கள் வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் மின்விசிறியை எடுத்துச்சென்றுள்ளனர்.

காலையில் எழுந்த போது அறையின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மூலம் கதவை திறந்து வெளியே வந்தனர். அப்போது வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

அதேபோன்று வள்ளலார் 6 வழிச்சாலை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அப்பு. இவருடைய வீட்டுக்குள்ளும் மர்ம நபர்கள் புகுந்து உள்ளனர். அங்கு அவர்கள் தூங்கிய அறையை வெளிப்பக்கமாக பூட்டி உள்ளனர். பின்னர் மற்றொரு அறையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காலையில் எழுந்த டாக்டர் குடும்பத்தினர் அறையின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உதவியுடன் வெளியே வந்துள்ளனர். அப்போது வீட்டில் வைத்திருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எவ்வளவு பணம் கொள்ளை போனது என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன், தொழில் அதிபர். இவர், நேற்று முன்தினம் வீட்டின் மேல்மாடியில் குடும்பத்துடன் தூங்கினார். நேற்று அதிகாலையில் எழுந்து வந்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அங்கு பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த பல லட்சம் ரூபாயை காணவில்லை. இவர்கள் மாடியில் தூங்கியபோது மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுபற்றி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்களும், கொள்ளை நடந்த வீடுகளுக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த தொழில் அதிபர் வீடு தவிர மற்ற 3 வீடுகளிலும் ஒரே மாதிரி அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு கொள்ளையடித்து சென்றிருப்பதால் ஒரே கும்பல்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

4 வீடுகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.20 லட்சத்துக்கும் மேல் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story