மணப்பாறை அருகே 2-வது நாளாக மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்


மணப்பாறை அருகே 2-வது நாளாக மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே அரசு உதவி பெறும் பள்ளியை அரசு பள்ளியாக மாற்றக்கோரி, 2-வது நாளாக மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமயபுரத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியின் கட்டிடம் சேதமடைந்த நிலையிலும், போதுமான வசதிகள் இல்லாத நிலையிலும் உள்ள நிலையில், அந்த பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அருகில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான சேவை மைய கட்டிடத்தில் அந்த பள்ளி செயல்பட தொடங்கியது.

இந்த பள்ளியில் சுமார் 134 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியதோடு, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததன் அடிப்படையில் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர். பின்னர் இந்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளியாக செயல்படும் என்ற எதிர்பார்ப்போடு மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் கிராம மக்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்குப்பின்னர் நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளியை அரசு பள்ளியாக மாற்றம் செய்யப்படாததைக் கண்டித்து பெற்றோர் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் நேற்று 2-வது நாளாக மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. அதிகாரிகள் யாரும் வந்து பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால் வேதனை அடைந்த பெற்றோர், பள்ளியில் இருந்து தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கி வேறு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதை தடுக்க அந்த பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், அந்த பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
1 More update

Next Story