தேவூர் அருகே நிலப்பிரச்சினையில் தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


தேவூர் அருகே நிலப்பிரச்சினையில் தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:27 PM GMT (Updated: 4 Jun 2019 10:27 PM GMT)

தேவூர் அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தேவூர்,

தேவூர் அருகே காவேரிப்பட்டி புதூர் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே விவசாயி ஒருவரின் நிலமும் உள்ளது. இந்த நிலத்தில் ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கும், விவசாயி குடும்பத்தினருக்கும இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் கோவிலில் பொதுமக்கள் கம்பி வேலி அமைத்தனர். அந்த கம்பிவேலியை அகற்றக்கோரி விவசாயி குடும்பத்தினர் சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கத்திடம் மனு கொடுத்தனர். இதனையடுத்து உதவி கலெக்டர் அமிர்தலிங்கம் சங்ககிரி தாசில்தார் அருள்குமாருக்கு கம்பி வேலியை அகற்ற உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தாசில்தார் அமிர்தலிங்கம், தேவூர் வருவாய் ஆய்வாளர் முனிசிவபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் அருள்முருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் வருவாய்த்துறையினர் அந்த இடத்திற்கு கம்பி வேலியை அகற்ற சென்றனர். அப்போது ஊர் பொதுமக்கள் பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து தாசில்தாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள் தாசில்தாரிடம் முறையாக நிலத்தை அளந்து தங்கள் கோவிலுக்கு உரிய இடத்தை அளவிட்டு கம்பிவேலியை அகற்றுமாறு கூறினார்கள், இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story